ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 233-வது தடவையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும்., அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாக அதிமுக காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்(65) 233-வது தடவையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இது குறித்து அவர் கூறும் போது, “சேலம் மாவட்டம் மேட்டூர் எனக்கு சொந்த ஊர். டயர் பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988 ஆம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டேன். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இதுவரை 32 எம்.பி. தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 72 சட்டமன்ற தேர்தல், கர்நாடகாவில் 3 தேர்தல், கவுன்சிலர் தேர்தல், பஞ்சாயத்து யூனியன் தேர்தல், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர். பின்னர் நான் தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். இதற்காக 233-வது தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன்” எனக் கூறினார்.