ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒருவர் இறந்துவிட்டதால் மட்டும் அவர் செய்த தீமைகள் அனைத்தும் புனிதமாகிவிடாது. அதைப் பேச வேண்டிய தேவை இல்லை. திமுக செய்வதை பார்த்தீர்கள் அல்லவா. தமிழுக்கு கலைஞரை தவிர வேறு யாரும் எதையும் செய்யாதது போலவும் நவீன தமிழகத்தின் சிற்பி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஓராண்டுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம். இதற்கெல்லாம் காசு ஏது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆளுமைகளையும் 12 குழுக்களாக போட்டு ஆண்டு முழுக்க கொண்டாடுகிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து தீய திட்டங்களுக்கும் வேரைத் தேடிச் சென்றால் அது திமுகவாகத்தான் இருக்கும்.
அமைச்சர்கள் எல்லாம் அந்த குழுவின் தலைவர்களாக இருக்கிறார்கள். கீழ்பவானியில் விவசாயிகள் 6 ஆவது நாளாக பட்டினி கிடக்கிறார்கள். அதைப் பார்க்க அமைச்சர்கள் போனார்களா? பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என 320 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகிறார்கள். அங்கு யாராவது சென்றார்களா? உலகத்திலேயே கொடுக்காத ஆட்சியை நாங்கள் தான் கொடுத்தோம் என பேசி வருகிறார்கள்.