நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாள் பெருவிழா நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டம். அது பட்டயம் கிடையாது. இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்க வேண்டும். எதார்த்தம் அதுதானே. சரத்குமார் சொல்வது சரிதானே. ரஜினிகாந்த் கூட ஆமாம் என்று தான் சொல்கிறார். அதை ரஜினிகாந்தே ஒத்துக்கொள்கிறார்.
2024 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா எனக் கேட்கின்றனர். அதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அன்று தான் யோசிக்கனும். விஜய்யின் ரசிகர்களை கவர்வதற்காக பேசுவதாகச் சொல்கிறார்கள். அது அப்படி இல்லை. சூர்யா, கார்த்திக் போன்றோருக்கு நெருக்கடி வரும்பொழுதும் பேசியுள்ளேன்.
நாங்க தனிச்சுப் போட்டியிட எப்பொழுதும் தயாராக உள்ளோம். பேரம் பேசுவோம். கூட்டணி பேசுவோம் என்ற சிந்தனை இல்லை. வந்தாலும் அதை அன்றைக்குத்தான் பேச வேண்டும். முதலில் விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும். கொள்கையை முன்வைக்க வேண்டும். எனக்கு சில கொள்கைகள் உள்ளது. அது போல் அவருக்கும் கொள்கைகள் இருக்க வேண்டும். நான் அவரை அமர வைத்து விட்டு பிரபாகரன் வாழ்க எனச் சொல்லி விஜய் பயந்துவிட்டால் என்ன செய்வது.
நான் விஜய்யை சந்திக்கவில்லை. அவரது வீட்டு வாசலில் நடந்து போனேன். நானும் பாரதிராஜாவும் நடைபயணம் மேற்கொண்டுள்ள போது வாயிற்காவலரிடம் விஜய் உள்ளாரா எனக் கேட்பேன். இதுதான் நடந்தது” எனக் கூறினார்.