Skip to main content

“சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தான் போகிறார்” - அண்ணாமலை பேட்டி

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

"Seeman is going to lose wherever he competes" - Annamalai interview

 

அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அப்படி ஒருவேளை அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் நான் அவருக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன்'' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், 'என் மண்; என் மக்கள்’ யாத்திரை பயணத்தில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சீமானின் கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, ''அவர் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தானே போகிறார். வாய் இருக்கு என்று பேசுகிறார். நான் தனியாக போட்டியிடுவேன் என்று சொல்கிறார். எந்த ஊருக்கு போக வேண்டும் என வழி தெரிந்தால் கஷ்டம். ஆனால் எந்த ஊருக்கு போகிறேன் என்றே தெரியாமல் நடக்கிறவர்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

 

சீமான் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். சீமான் புரிந்துகொள்ள வேண்டும். மோடி போட்டியிட்ட வாரணாசியில் போட்டியிட வேண்டியதுதானே. ஜெயிக்க மாட்டேன் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன. வாரணாசியில் போட்டியிட்டாலும் ஒன்றுதான் ராமநாதபுரத்தில் போட்டியிட்டாலும் ஒன்றுதான், சென்னையில் போட்டியிட்டாலும் ஒன்றுதான். ராமநாதபுரத்திற்கு மோடி வந்தால் தான் எங்களுடைய பிரச்சனையெல்லாம் தீரும் என மக்கள் கேட்கிறார்கள்.

 

இந்தியாவில் மோசமான 112 மாவட்டங்களில் ராமநாதபுரமும் ஒன்று. ராமநாதபுரத்தில் ஏன் மக்கள் நேர்மையான மோடி வேண்டும் என கேட்கிறார்கள். மோடி வந்தாலாவது வளர்ச்சி அடைவோம் என்று தான் நினைக்கிறார்கள். மோடி எங்கு நின்றாலும் ஜெயிப்பார். எங்கு நின்றாலும் பெரிய மெஜாரிட்டியுடன் ஜெயிப்பார். அவர் வந்தால் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் உள்ளூர்க்காரரா வெளியூர்க்காரரா என்பதெல்லாம் இல்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்