நடிகர் சித்தார்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் சித்தா. இந்தப் படத்திற்காக நடிகர் சித்தார்த் கர்நாடக மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சி அரங்கத்திற்கு வந்த கன்னட அமைப்பினர் அவரை பேசவிடாமல் தடுத்து கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக சித்தார்த் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றார்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இங்கு சுதீப், யாஷ் நடித்த கே.ஜி.எஃப் இரண்டு பாகங்களும் வெளியாகியுள்ளன. நாம் இதற்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், அவர்கள் விஜய் உள்ளிட்ட மற்ற நம் நடிகர்களின் படத்தை திரையிட விடுவதில்லை. சித்தார்த் நடிகர். அவருக்கும் தண்ணீர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை. அவர் காவிரியில் தண்ணீர் கொடுங்கள் எனவும் கேட்கவும் இல்லை. இது அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டிய விஷயம்.
ஏன் அந்த அரங்கத்தில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் சலசலப்பை ஏற்படுத்தியவர்களை அப்புறப்படுத்தவில்லை. இதேபோல், நாங்கள் இங்கு செய்தால் இந்த மாநில காவல்துறை எங்களை கைது செய்து அழைத்து சென்று சலசலப்பு இல்லாமல் பார்த்து கொள்ளும், ஏன் இந்த அடிப்படை மாண்புகூட அந்த மாநிலத்தில் இல்லை. எங்களை இன வெறியர்கள் என்கிறீர்கள் அவர்களுக்கு என்ன பெயர் சொல்லுவீர்கள். ஒவ்வொரு முறை தண்ணீர் கேட்கும்போதும் எங்களை அடிக்கிறார்கள். பிறகு ஒரே நாடு என்றால் எப்படி பற்று வரும்.
என் வாகனங்கள், நான் என எதுவும் அங்கு வரக்கூடாது என்றால் இது பக்கத்து மாநிலமா அல்லது பகை நாடா? எங்களை இனவாதம், பிரிவினைவாதம் பேசுகிறார் என சொல்லும் நபர்கள் இதனை கண்டிக்க வேண்டுமல்லவா? நெய்வேலி மின்சாரத்தை கொடுக்கக் கூடாது என்று நான் போராடியபோது, துணை ராணுவம் போட்டு அதனை பாதுகாத்தீர்கள். அதேபோல், அங்கு அணையை துணை ராணுவம் போட்டு பாதுகாத்து உரிய தண்ணீரை திறந்துவிடுங்கள். அல்லது என் மக்கள் போக்குவரத்துக்கு துணை ராணுவம் நிறுத்தி பாதுகாப்பு கொடுங்கள். பாதுகாப்பற்ற சூழல் சொந்த நாட்டிலேயே இருக்கும் என்றால் இங்கு காவல்துறையும், ராணுவமும் எதற்கு.
சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா நடிகர்கள் வந்தால் அனுமதிப்பீர்கள். இந்தியா உலக சந்தையாக இருக்கிறது. உள்ளூரில் நாங்க தயாரித்ததை பக்கத்து மாநிலத்தில் விற்க முடிவதில்லை என்றால் இது என்ன இந்தியா? கே.ஜி.எஃப். வரும்போது படத்தை திரையிடக்கூடாது என நான் ஒரு அறிக்கையை கொடுத்தால் உங்களால் படத்தை வெளியிட முடியுமா?
அந்த மாநிலத்தில் உள்ள இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, தேசிய ஒற்றுமை பேசக்கூடிய கட்சிகள், அங்கு இருக்கும் முற்போக்கு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மானுட பற்றாளர்கள் என யாரும் வாய் திறக்கவில்லை என்பது மிகவும் கொடுமையானது. இங்கு இருக்கும் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவில்லை என்பது பெருத்த அவமானம்” என்று தெரிவித்தார்.