தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வசந்தகுமார் திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, "உயர்வான செயல். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவில் உள்ள உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான்தான். இந்த நிகழ்ச்சியை நான் செய்தி ஊடகத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் குஷ்பு. காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு; கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியிருந்தது. பின்னர் பா.ஜ.கவில் இணைகிறார் குஷ்பு என்றும் செய்திகள் பரவியது. இதற்கு குஷ்பு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் விவாதத்தை எழுப்பும் என்கிறார்கள் கட்சியினர்...