''உள்ளாட்சித் தேர்தல்! அதிமுகவின் அதிரடி வியூகம்? சமாளிக்குமா திமுக?'' என்ற தலைப்பில் 07.11.2019 அன்று நக்கீரன் இணையதளத்தில் செய்திகள் வெளியிட்டிருந்தோம். அதில், ''உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டாம். இரண்டு அல்லது மூன்று அல்லது கட்டங்களாக நடத்தலாம். அப்படி நடத்தினால்தான் சுலபமாக திமுகவை தோற்கடிக்க முடியும். அதிமுக வெற்றி பெற இதுவே வழி என்றும், மேயர் பதவி மற்றும் நகராட்சி தலைவர் பதவியை தற்போது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை மாற்றி மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்க வைக்கலாம் என்றும் அதிமுக சீனியர்கள் ஆலோசனை நடத்துவதாக குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் தேதியை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதி என இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
டிசம்பர் 6ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். டிசம்பர் 16ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். டிசம்பர் 18ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.