அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் நேற்று தன்னுடைய பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கவேண்டும் என்று சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி சசிகலாவை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது மேலும், அதிமுகவில் உள்ள சசிகலா எதிர்த்தரப்பை பரபரப்பாக்கியுள்ளது.
கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆறுகுட்டி, “தமிழ்நாட்டில் அமமுக இயக்கத்தை துவக்கி அந்த இயக்கத்தின் தலைமையாக இருக்கின்ற டி.டி.வி. தினகரனும், இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துகொண்டிருக்கின்ற சசிகலா இருவரும் இணைந்து, அதிமுக இணைக்கப்பட்டு, இந்தக் கட்சியை வழிநடத்தினால்தான் அதிமுக தோய்வில்லாமல் மேலும் வளரும்.
நான் டி.டி.வி., சசிகலா இருவரையும் பார்த்ததில்லை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா, ‘100 ஆண்டுகாலம் இந்த இயக்கம் இருக்க வேண்டும்’ என்று சொன்னார் அதுபோல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்திக்கிறேன். இது என் தனிப்பட்ட பேட்டி” என்று தெரிவித்தார்.