பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திங்கள் கிழமை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,
சென்னையில் தண்ணீர் பிரச்சனை அதிகரித்துள்ளது. எனது தொகுதியான ஆர்.கே.நகரில் மக்களுக்கு தண்ணீர் விநியோகத்தை நாங்களே இன்று (திங்கள் கிழமை) முதல் தொடங்கியுள்ளோம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை உள்ளது.
தண்ணீர் கிடைக்கவில்லை என்று சென்னையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரே சொல்கிறார். தண்ணீர் இல்லை என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சொல்கின்றன. சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது என்பது ஊருக்கே தெரியும். ஆனால் இந்த ஆட்சியை நடத்துபவர்கள் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று சொல்கிறார்கள்.
இந்த அ.தி.மு.க. அரசு தனது இறுதி பயணத்தில் உள்ளது. ஆட்சிக்கு முடிவு வந்துவிடும். இந்த முடிவு எப்போது வரும் என்று என்னால் சொல்ல முடியாது. தமிழக சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. அ.ம.மு.க.வை ‘லெட்டர் பேடு’ கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து எங்கள் நிர்வாகிகளை ஏன் உங்கள் கட்சியில் சேர்க்கிறீர்கள். எங்கள் கட்சியினரை மிரட்டி அழைத்துச் சென்று அ.தி.மு.க.வில் சேர்க்கிறார்கள்.
இன்று (நேற்று) சிறைக்குள், கண்காணிப்பாளரை சந்தித்தேன். அப்போது அவர், உங்கள் சித்தி, கன்னடம் நன்றாக பேசுகிறார் என்று கூறினார். அவர் கன்னட தேர்வில் தேர்ச்சி பெற்றாரா என்பது தெரியவில்லை. இதுபற்றி அடுத்த முறை வரும்போது, அவரிடம் கேட்டு சொல்கிறேன். இவ்வாறு கூறினார்.