காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்க வேண்டாம் என இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக யசோதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உள்ளாட்சித் தேர்தலில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் கேட்டு இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அ.தி.மு.க. ஆதரவு கட்சியைச் சேர்ந்த இவர் முதலமைச்சரிடம் நேரில் பேசி இப்பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும். அதற்கு பதிலாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காகத் தான் அ.தி.மு.க. இவரை பயன்படுத்தியிருப்பதாக கருத்து கூறியிருந்தார். இதில் என்ன தவறு என்று தெரியவில்லை.
கே.எஸ். அழகிரி கூறிய கருத்துக்கு எதிர்கருத்து கூறாமல், அவரை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவசியமா எனத் தெரியவில்லை. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. செ.கு. தமிழரசனை விட பலமடங்கு கூடுதலாக பல்வேறு உரிமைகளை தலித் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி பெற்று கொடுத்திருக்கிறது. 1954களிலேயே காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பரமேஸ்வரன் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதை எவரும் மறைக்க முடியாது.
மேலும், காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களாகவும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகி கக்கன், இளைய பெருமாள், மரகதம் சந்திரசேகர் போன்ற பலர் பொறுப்பு வகித்தது செ.கு. தமிழரசனுக்கு தெரியாமல் இருக்க நியாயம் இல்லை.
என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் தான் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பொறுப்பு வழங்கி பெருமைப்படுத்தியது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸ் இயக்கத்திற்கும், தலித்துகளுக்கும் இருக்கிற உறவு என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. ஆயிரம் செ.கு. தமிழரசன்கள் ஒன்று சேர்ந்தாலும், அந்த உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது. அது எக்கு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது. தலித் சமுதாயத்தை தேசிய அளவில் பாதுகாக்கிற ஒரே இயக்கம் காங்கிரஸ் இயக்கம் என்பது செ.கு. தமிழரசனுக்கு நன்றாகவே தெரியும். இன்றைய சகவாச தோஷத்தின் காரணமாக காங்கிரஸ் மீது அவரும், அவரது இயக்கத்தினரும் சேற்றை வாரி இறைக்க முயற்சிப்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, இனியும் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் காங்கிரஸ் கட்சி மீது தாக்குதல் தொடுக்கப்படுமேயானால், காங்கிரஸ் கட்சி தோழர்கள் அணிதிரண்டு முறியடிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.