முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஜெயா பிரிண்டர்ஸ், நமது எம்ஜிஆர் நிறுவனத்திற்கும் தானே உரிமையாளர் என்று சசிகலா கூறியுள்ளார். மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் ரிசார்ட், ஷாப்பிங் மால், ஆலைகள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதை சசிகலா வருமானத் துறையிடம் முழுமையாக மறுத்துள்ளார் என்று தகவல் கூறுகின்றன.அதேபோல் கோடநாடு, க்ரீன் டீ எஸ்டேட், ராயல்வேலி, ஃ புளோரிடெக் பங்குதாரராக ஜெயலலிதா உடன் இருந்ததாகவும், ஜெயலலிதா மறைந்த பின் 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி முதல் அந்த நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என வருமான வரித்துறை அறிக்கையில் சசிகலா கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவ்வளவு சொத்துக்கான வருவாய் எப்படி வந்தது அதற்கான ஆதாரங்கள் என்ன என்று தீவிர விசாரணையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு சில அரசு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். அப்போது தான் சசிகலா புதிதாக பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது என்கின்றனர். அதில் பல சொத்துக்கள் செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கின்றனர். இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது தொடர்பாக சசிகலாவே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் இந்த கடிதம் கிடைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. பெங்களூரு ஜெயிலில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு இந்த கடிதத்தை எழுதி உள்ளார் என்று கூறுகின்றனர். மேலும் இதனால் தமிழகத்தில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பயத்தில் இருப்பதாக சொல்லப்டுகிறது.