இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சேலம் மேற்கு மாவட்ட திமுக வலியுறுத்தி உள்ளது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை (நவ. 3) நடந்தது. மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ''சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 946 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 10 பேர் கொண்ட பூத் கமிட்டியை நியமிக்க வேண்டும்.
வரும் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் சிறப்பு முகாமில், திமுகவினர் பங்கேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றார். இக்கூட்டத்தில், திமுக தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு இந்தி திணிப்பு மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, துணை செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், எலிசபெத்ராணி, பொருளாளர் பொன்னுசாமி மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.