தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக, இன்று (30/03/2021) தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வெற்றிக் கூட்டணி. கேட்கும்போதெல்லாம் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைக் கொடுக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி. உலக அளவில் இந்திய நாடு பெருமை அடைவதற்கு பிரதமர் மோடியின் அயராத உழைப்பே காரணம். தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு அ.தி.மு.க. அரசு. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அ.தி.மு.க. அரசு. 5,200 கி.மீ. அளவிற்கு நெடுஞ்சாலைகளை அமைத்து உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார் பிரதமர் மோடி. ஏழை, எளிய மக்களுக்குச் சொந்தமான வீடுகளை உருவாக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமரின் ஆலோசனையைப் பெற்று தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியது" என்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பிரதமருக்கு 'வேல்' ஒன்றைப் பரிசாக வழங்கினார்.