Skip to main content

“ஆளுநர் என்ன நிலைமைக்கு செல்லப் போகிறார் என்பது இன்னும் 10,15 நாட்களில் தெரியும்” - ஆர்.எஸ். பாரதி

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

RS Bharathi comment on Annamalai, RN Ravi

 

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

இந்த கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “திமுக அரசை ஆளுநர் விமர்சித்து வருகிறார். தமிழகத்திற்கு பெட்டி தூக்கிட்டு வந்தவன் தி.மு.கவை குறை கூறினால் அதை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. காமராஜர் பிரதமராவதை தடுத்தது தி.மு.க தான் என அண்ணாமலை கூறியுள்ளார். காமராஜர் மறையும் வரை அவருக்காக அனைத்தையும் செய்து கொடுத்தது திமுக.  காமராஜருக்கு சிலை வைத்த கட்சி திமுக தான் என்பதை மறந்து விடக்கூடாது. இது தற்போது உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு கூட தெரியாது. எவ்வளவு தைரியம் இருந்தால் அண்ணாமலை காமராஜர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தது என்று சொல்லலாம். காமராஜர் பிரதமர் பதவியை விரும்பவில்லை. நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருத்தர் பிரதமராக வரவேண்டும் என அடையாளம் காட்டியவர் காமராஜர்.

 

பசு வதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக இருந்ததால் டெல்லியில் 1966 ஆம் ஆண்டு காமராஜர் வீட்டிற்கு ஜன சங்கத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்தனர். அப்போது அங்கு திமுக தொண்டன் கோதண்டபாணி என்பவர் வீட்டுக்குள் சென்று காப்பாற்றினார். அவர் வீட்டுக்கு தீ வைத்து காமராஜரை கொல்ல முயன்றவர்கள் இன்றைய பா.ஜ.கவினரான அன்றைய ஜன சங்கத்தினர் தான் என்பதை யாரும் மறந்து விட முடியாது. காமராஜர் இறந்தபோது அவருக்கு அரசு மரியாதை செலுத்தி மணிமண்டபமும் கட்டியவர் கலைஞர்.  சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என வி.பி.சிங்கிடம் கலைஞர் கோரிக்கை வைத்தார். அதனை வி.பி.சிங் நிறைவேற்றி தந்தார்.  காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். அவர் வழியில் செயல்படும் நம் முதலமைச்சர் ஜூலை 15 ஆம் நாளான காமராஜர் பிறந்தநாள் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.  

 

செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு அயோக்கியத்தனமாக நடத்தப்படுகிறது. அவரை கைது செய்தபோது மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்பதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன். நீதிமன்றம் நேற்று அதை உறுதி செய்துள்ளது. அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார். இல்லையென்றால் அவர்கள் செய்த சித்திரவதையில் உயிரிழந்திருப்பார். அவருக்கு நாம் இரங்கல் தீர்மானம் தான் வாசித்திருக்க வேண்டி இருந்திருக்கும். அவர் தற்போது தப்பித்துள்ளார்.  மகாராஷ்டிராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அஜித் பவார் மீது வழக்கு உள்ளது. அவர் பா.ஜ.க விற்கு சென்ற உடன் அம்மாநில ஆளுநர் அவருக்கு துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இங்கே உள்ள ஆளுநர் உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு கூறினாலும் அவர்கள் இருவரும் அமலாக்கத்துறைக்கு கஷ்டடி கேட்க அதிகாரம் இல்லை என்பதை கூறி உள்ளார்கள்.

 

இதன் மூலம் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடி எடுக்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது. தி.மு.க விடம் சட்ட ரீதியாக மோதியவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அது ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதிலிருந்து கலைஞருக்கு மெரினாவில் இடம் பெற்று தந்தது வரை நடந்துள்ளது. எங்களிடம் மோதி ஒரு போதும் வெற்றி பெற முடியாது.  தமிழ்நாடு ஆளுநர் என்ன நிலைமைக்கு செல்லப் போகிறார் என்பது இன்னும் 10,15 நாட்களில் தெரியும். தி.மு.க தொண்டர்கள் கட்சிக்கு ஒரு சோதனை என்றால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கமாட்டார்கள். முதலமைச்சர் பெங்களூர் சென்றால் தடுப்போம் என அண்ணாமலை கூறி உள்ளார். அண்ணாமலைக்கு துணிச்சல் இருந்தால் முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும்” என்று சவால் விடுத்தார்.  

 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, “அண்ணாமலை அவரின் இருப்பை காட்டிக்கொள்ள தான் பேசுகிறார். அவருக்கு நாங்கள் பதில் தருவதே இல்லை. அண்ணாமலையை பற்றியும் நாம் பயப்பட வேண்டியதில்லை; அதிமுகவை பற்றியும் நான் பயப்பட வேண்டியதில்லை. கலைஞர் திருச்சிக்கு வரும் பொழுதெல்லாம் திருச்சிக்கு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அவர் வழியில் தற்போது முதலமைச்சரும் பல திட்டங்களை திருச்சிக்கு தந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.கவில் திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. செந்தில் பாலாஜி சிறை சென்றுவிட்டார் அடுத்து நேரு தான் என அ.தி.மு.கவினர் கூறுகிறார்கள். நாங்கள் சிறை செல்வது குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அ.தி.மு.கவினரை போல் பயப்படமாட்டோம். திமுகவிற்காக அமைச்சராகவும் இருப்பேன்.; சிறைக்கு செல்ல தயாராகவும் இருப்பேன். தி.மு.கவின் தொண்டர்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது” என்றார். இந்த கூட்டத்தில் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்