Skip to main content

'உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் விட்டுக்கொடுத்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்' – எ.வ.வேலு பேச்சு

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நவம்பர் 13ந்தேதி நடைபெற்றது. மாநில செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசும்போது
 

resolutions taken by dmk


முதலில் கட்சியின் தீர்மானங்களை விளக்கியவர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் முழுவதும், பொதுக்கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் திண்னை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தேர்தல், கவுன்சிலர் தேர்தல்களில் பொதுமக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு விட்டுக்கொடுத்து, அவர்களின் வெற்றிக்கு பாடுப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டுக்கொண்டு போட்டியிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். இந்த வெற்றி என்பது வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்றார்.

மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் : 1

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாக திகழும் பொதுக்குழு கூட்டம் கடந்த 10.11.2019 அன்று கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது தமிழகத்தின் வரலாற்றில் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு பகல்கொள்ளை, ஊழல், எதற்கும் லஞ்சம், எங்கும் கமிஷன் என்று அபமானகரமான ஆட்சி என்பதாலும் அதற்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பு அளித்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்ற தீர்மானம் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மாவட்டத்தில், மாவட்ட தலைநகரில் வரும் 16.11.2019 அன்று மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் மேலும், துண்டு பிரச்சுரங்கள் தயார் செய்து மாவட்டம் முழுவதும் வழங்குவது என்றும், பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் இம்மாவட்ட கழகம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 2

தமிழ்நாட்டில் வெகு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் என்றும் போட்டியிட விரும்புவோர் வரும் நவம்பர் 14 முதல் 20ம் தேதி வரை மாவட்ட கழகத்தில் அல்லது தலைமைக் கழகத்தில் அதற்கான விண்ணப்ப கட்டணத்துடன் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக தோழர்கள் ஒவ்வொரு பொறுப்புக்கும் உரிய ஊர்களில் கலந்து பேசி ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து. வெற்றியினை மட்டுமே இலக்காக கொண்டு கழகத் தோழர்கள் செயல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெரு வெற்றியினை ஈட்டித் தருமாறு மாவட்ட கழகம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சட்ட திட்ட திருத்தங்களின் அடிப்படையில் ஓரே ஊராட்சியாக உள்ள அமைப்பில் உட்பிரிவுகளாக உள்ள அரசு ஆவணங்கள் அல்லது வாக்காளர் பட்டியலின்படி தனிப்பெயரோடும் எல்லையோடும் விளங்கும் ஊர்களில் அமையப்படுவதும் ஊர்க்கிளையாகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குடியிருப்புகளில் தனியாக கிளைகள் அமைக்கப்படும் என்றும் ஆதிதிராவிடர் மட்டுமே அக்கிளைகளில் நிர்வாகிகளாக இருத்தல் வேண்டும்  என்றும் விதிகளில் திருத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட பொதுக்குழுவின் முடிவு கழக வளர்ச்சிக்கு வலுவூட்டுவதாக அமையும் என்பதால் இச்சட்ட திருத்தத்தை கொண்டுவந்த கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் திருத்தத்தை நிறைவேற்றி தந்த கழக பொதுக்குழுவிற்கும் மாவட்ட கழகம் பாராட்டுதலையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் : 4

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களுக்கு தலைவர் கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூர் அருகே உள்ளே காட்டூரில் ‘தயாளு அம்மாள் அறக்கட்டளை’ சார்பில் தமிழினத்தலைவர் கலைஞர் அருங்காட்சியகம் அமைத்திட  பெருமுயற்சி எடுத்து சீரிய பணியாற்றி கொண்டிருக்கிற கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு, இம்மாவட்ட கழகம் பாராட்டுகளையும், நன்றினையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்