தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முதல் நாளான இன்று காலையில் சரியாக 10 மணிக்கு கூடிய சட்டமன்றத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் முலாயம் சிங் யாதவ் உட்பட 7 தலைவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் அலுவல்கள் நிறைவு பெற்றதை அடுத்து சபாநாயகர் அப்பாவு நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
இதன் பின் சட்டப்பேரவைத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கூட்டம் துவங்கும். அதில் கூடுதல் வரவு செலவு திட்டத்தினை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் முழுமையாக சட்டமன்றம் நடைபெறும்.
இரு அறிக்கைகள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை இரண்டும் நாளை சட்டமன்றத்தில் வைக்கப்படும்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து நான்கு கடிதங்களும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து இரு கடிதங்களும் தரப்பட்டுள்ளன. பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு வராததற்கு காரணம் அதிமுக கழகத்தின் பொன்விழா ஆண்டினை கொண்டாடுவதால் இருக்கலாம் என கேள்விப்பட்டேன். நாளை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்” எனக் கூறினார்.