முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று முன்தினம் இரவே டெல்லி கிளம்பினார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் அதிமுகவில் இரட்டை தலைமை காலாவதி ஆகிவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ''ஒற்றுமையை நாடுபவன் நான். எனவே அனைவரையும் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்வேன். நான் இன்று வரை யார்கிட்டயும் எதற்காகவும் சென்றது கிடையாது. ஆனால் இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒன்றுபட வேண்டும், தொண்டர்களின் எண்ணப்படி நடக்க வேண்டும். அதிமுக கழகத் தோழர்கள் அனைவரும் ஒற்றைத் தலைமையைத்தான் விரும்புகிறார்கள். இந்த ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமை தாங்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஒற்றைத் தலைமை கொண்டுவருவதற்கான தீர்மானம் நிறைவேற்றுவதற்கான சூழல் அமைந்துள்ளது. அந்த நல்ல செய்தியை நீங்கள் கேட்கத்தான் போகிறீர்கள். இதனால் மீண்டும் சென்னை செங்கோட்டையிலே அதிமுக ஆட்சியைக் கொண்டுவர பாடுபட வேண்டும்'' என்றார். அப்பொழுது அருகிலிருந்த ஜெயக்குமார் ''புனித ஜார்ஜ் கோட்டையில'' எனக்கூற, ''புனித ஜார்ஜ் கோட்டையில் நமது ஆட்சி அமைய வேண்டும்'' என்றார் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்.