ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தது. இதனை அனைத்து எதிர் கட்சிகளும் எதிர்த்து வந்த நிலையில், திமுக தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிகளின் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 14 கட்சிகள் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
இதில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யுமான திருமாவளவன் பங்கேற்பார் என்று பார்த்த நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் பேசும் போது, தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னால் கலந்து கொள்ளமுடியவில்லை என்று தெரிவித்தார். இது பற்றி விசாரித்த போது, நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தொல்.திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அதாவது, மதமாற்றம் ஒரு பார்வை என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார். அந்த ஆய்வில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள கிராம மக்கள் மதம் மாறியதை பற்றி இருந்தது. இதனால் தொல்.திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் கொடுக்கப்பட்டது.