
வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து பீகாரை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தமிழகத்தில் காக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதே நேரம் வடமாநிலத்தவர்கள் கணிசமான அளவில் சொந்த ஊருக்கு திரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''தமிழ்நாட்டில் இதனால் என்ன பாதிப்புகள் வரும் என்று நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே கரோனா காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த நிறைய தொழிற்சாலைகளை மூடினார்கள். இப்பொழுது இந்த ஒன்றரை வருடத்தில் மீண்டும் தொழிற்சாலைகள் மெதுவாக திறக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தி எதற்காக. தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை, சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இண்டஸ்ட்ரீஸ் போன்றவற்றில் 50ல் இருந்து 70% வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்படி ஒரு வதந்தியால் இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை விட்டு, வேலையை விட்டு வடமாநிலத்திற்கு சென்றுவிட்டார்கள் என்றால் இந்த தொழிற்சாலைகள் எல்லாம் முடங்குவதற்கு காரணமாக இருக்கும்.
சமீப காலமாக, மூன்று நான்கு வருடங்களாக ஒரு தவறான பிரச்சாரம் தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு சில பேர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கன் சென்று சொல்லி வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களால் தமிழ்நாட்டு இளைஞர்கள், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று ஒரு தவறான பிரச்சாரத்தைச் சொல்கிறார்கள். ஆனால், உண்மைநிலை என்னவென்றால் தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியால், ஆங்கிலப் புலமையால் இன்று உலகம் முழுவதும், இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் தலைசிறந்த நிபுணர்களாக இருக்கிறார்கள். உடல் உழைப்பை தரக்கூடிய கட்டுமான வேலை, சாலை போடுதல், டெக்ஸ்டைல் துறையில் வேலை செய்வதற்கு விருப்பம் கிடையாது. அவர்களெல்லாம் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார்கள். ஒயிட் காலர் ஜாப்புக்கு போய்விட்டார்கள். சாதாரண கூலி வேலைகள் செய்ய ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள், தமிழ்நாடு முதலாளிகள் வடமாநிலத்தவர்களை வைத்து வேலை செய்கிறார்கள்'' என்றார்.