தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்காக மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மேலும், மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் அனைத்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கிக்கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தவர்களை அழைத்து நேர்காணலையும் நடத்திவருகிறது. அடுத்ததாக, திமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதியையும் அறிவித்துள்ளது.
இப்படி தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையைப் பெரும் வேகத்துடன் செய்துவரும் வேளையில், தினகரனின் அமமுக இன்று (03.03.2021) விருப்ப மனு விநியோகத்தைத் துவங்கியுள்ளது. கூட்டணி குறித்தான பேச்சுகளும் வெளிப்படையாக, மும்முரமாக நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன், “எங்கள் பொதுக்குழு முடிந்தவுடன் நான் சொன்னேன், அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து அனைத்துக் கட்சிகளையும் அதில் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறோம் என்று. அதைத்தான் தற்போதும் சொல்கிறேன். சில முக்கியக் கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். இதை வெளியில் சொல்வது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். இறுதி முடிவு வந்தவுடன் நிச்சயம் உங்களிடம் தெரிவிப்பேன்.
கூட்டணி பேச்சுகளைக் கட்சி அலுவலகத்திற்குச் சென்றுதான் பேச வேண்டும் என்றில்லை. எங்களுடைய ஒரே இலக்கு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். அதற்காகத்தான் நான் முயற்சிகளைச் செய்துகொண்டு வருகிறேன். இந்தக் கட்சி கூடாது, அந்தக் கட்சி கூடாது என்பதைவிட, திமுகவை எதிர்க்கின்ற அத்தனை கட்சிகளும் அமமுக தலைமையை ஏற்று வந்தால், இணைந்து செயல்படத் தயார்” என்று தெரிவித்தார்.