21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த காந்திய மக்கள் இயக்கத்தன் தமிழருவி மணியன், என்றைக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவார். களத்தில் நிற்பார். வாக்காளர்களை சந்திப்பார். ரஜினிகாந்த் ஓராண்டாக வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. ஓராண்டாக தமிழகம் முழுவதும் இருக்கிற ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் கடுமையாக களப்பணியாற்றி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி என்று சொல்லப்படுகிற வாக்குச்சாவடிகளில் ஆட்களை நியமிப்பதற்கான வேலைகளை செய்து முடித்திருக்கிறார்கள். மக்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை என்னென்ன என்பது குறித்தான தெளிவான பாதையோடு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு அரசியல் கட்சியை தொடங்கும்போதே அந்த கட்சிக்கான பெயர், சின்னம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, வாக்காளர்களை சந்திக்கும்போது என்னென்ன கொள்கைக்கு தங்களை முன்னெடுத்து வைப்பது, தேர்தலை அறிக்கையாக எதை தருவது என்பது உள்பட இந்த ஓராண்டு காலத்தில் எல்லா நிலைகளிலும் வேகமாக ஆரவாரம் இல்லாமல் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் ரஜினியின் அரசியல் பாணி. இவ்வாறு கூறினார்.