பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் புனித வழிபாட்டுத் தலமான நீராவியடி பிள்ளையார் கோயிலில், புத்த துறவியின் உடலை தீயிட்டு எரித்து சிங்கள இனவெறித் தாக்குதலை புத்த துறவிகள் நடத்தியுள்ளனர். சிங்கள இராணுவத் துணையுடன் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
இலங்கை வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு நகரில் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள நீராவியடி பிள்ளையார் கோயிலில் உள்ள புனித தீர்த்தக் கிணறு அருகில் கடந்த திங்கட்கிழமையன்று கொலம்ப மேதாலங்க தேரர் என்ற புத்த துறவியில் உடலை சிங்களர்களும், தெற்கு இலங்கையிலிருந்து வந்த புத்த துறவிகளும் தீயிட்டு எரித்துள்ளனர். இந்து மத அடையாளமாக திகழும் பிள்ளையார் கோயிலில் புத்த துறவிகள் நுழைய தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்ற ஆணையைக் காட்டி, துறவியின் உடலை எரிக்க தமிழ் இளைஞர்களும், வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதனால் ஆத்திரமடைந்த புத்த துறவிகள் சிங்களப்படையினரின் ஆதரவுடன் தமிழர் இளைஞர்களையும், வழக்கறிஞர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில், முல்லைத் தீவு நகரில் செவ்வாய்க்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு சிங்களர்களின் இனவெறி செயலுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தமிழர்களுக்கு தாங்கள் வழிபடும் ஆலயங்கள் எவ்வளவு புனிதமானவை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவர்களின் உணர்வுகளையும், வழிபாட்டு உரிமைகளையும் மதிக்காமல், வழிபாட்டுக்கு உரிய கோயிலில் சடலத்தை எரித்தது இனப்படுகொலைக்கு நிகரான செயலாகும். நீராவியடி பிள்ளையார் கோயிலில் புத்த துறவியின் உடல் எரிக்கப்பட்டதை தனித்து பார்க்கக் கூடாது; இதன் பின்னணியில் நடந்த மற்ற விவரங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது தான் இந்நிகழ்வுகளுக்கு பின்னால், தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்கள இனவெறி தலைவிரித்தாடுவதை புரிந்து கொள்ள முடியும்.
2009&ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளாக மாற்றும் முயற்சியில் சிங்கள் அரசு ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்து கோயில்களை கைப்பற்றும் நோக்குடன் நீராவியடி பிள்ளையார் கோயிலை புத்த துறவிகள் ஆக்கிரமித்தனர். எனினும் தமிழர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கோயிலை கடந்த ஜூலை மாதம் மீட்டனர். ஆனாலும் கோயிலை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை கொலம்ப மேதாலங்க தேரர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வந்தனர். அவர் சில நாட்களுக்கு முன் இறந்த நிலையில், அவரது உடலை திட்டமிட்டே கோயிலில் எரித்துள்ளனர். இதன்மூலம் தமிழர்களை வெளியேற்றி விட்டு கோயிலை கைப்பற்றுவது தான் அவர்களின் திட்டமாகும். ஈழத்தமிழர்களுக்கு வழிபாட்டு உரிமை கூட வழங்கப்படவில்லை என்பதற்கு இதுவே ஆதாரம் ஆகும்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த ஐ.நா. மனித உரிமை ஆணையம், அங்கு போர்க்குற்றங்கள் நடந்தது உண்மை தான் என்றும், அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர்கள் அச்சமின்றி வாழ வகை செய்யப்பட வேண்டும்; அவர்களின் நிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான ஆணைகளை இலங்கை அரசுக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் பிறப்பித்திருக்கிறது.
ஆனால், இந்த உத்தரவுகளில் எதையும் நிறைவேற்றாத சிங்களப் பேரினவாத அரசு, தமிழர்களை கடந்த 10 ஆண்டுகளாக கொடுமைப் படுத்தி வருகிறது. தமிழர்களை கோயில்களுக்கு செல்லவிடாமல் தடுக்கும் சிங்களப்படைகள், இந்து கோயில்களை சிங்களப் பேரினவாதிகள் கைப்பற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் உதவுகின்றன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புத்த விகாரைகள் கட்டப்பட்டிருப்பதிலிருந்தே தமிழர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதை அறிய முடியும். ஓர் இனத்திற்கு வாழும் உரிமையும், வழிபாட்டு உரிமையும் மறுக்கப்படும் நாட்டில் அந்த இன மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இத்தகைய சூழலில் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அவர்களுக்கு தமிழீழம் அமைத்துத் தருவது தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். எனவே, ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் அமைக்கவும், அதுவரை இலங்கையில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழ்வதை உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் அமைப்பும், உலக நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.