தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுவை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரச்சாரத்தை முடித்துவிட்டு டெல்லி செல்வதற்காக சென்னை வந்தவர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அவரை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி அமித்ஷாவை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில், தேர்தல் அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து அவர்களிடம் விவாதித்தார் அமித்ஷா. குறிப்பாக, அதிமுக - பாஜக கூட்டணிக்கான வெற்றி குறித்து அவர்களிடம் அமித்ஷா கேட்டபோது, “140 முதல் 156 இடங்களில் நம் கூட்டணி ஜெயிக்கும்” என தன்னிடமிருந்த ஒரு சர்வே ரிப்போர்ட்டைக் காட்டி நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனை ஏற்க மறுக்கும் தொனியில் தலையை இடது வலதாக அசைத்த அமித்ஷா, மத்திய உளவுத்துறை மட்டுமல்லாமல், தனியார் ஏஜென்சிகள் மூலம் எடுக்கப்பட்ட சர்வேக்களில், ‘அதிமுக கூட்டணிக்கு 80-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும்’ என சொல்லப்பட்டிருக்கும் ரிப்போர்ட்டுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
ஏதோ ஒரு திட்டத்துடன்தான் அதிமுகவைக் குறைத்து மதிப்பிடுவதாக நினைத்து மௌனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து, அதிமுகவை விட்டு பிரிந்து சென்றுள்ள தினகரனை கட்சியில் இணைத்துக்கொண்டால் திமுகவின் வெற்றியைத் தடுக்கலாமே? என அமித்ஷா சொன்ன போதுதான், எடப்பாடி பழனிசாமிக்கு உண்மை புரிந்திருக்கிறது. அப்போது, “டி.டி.வி தினகரன் கட்சிக்கு எந்த செல்வாக்கும் இல்லை. அவரிடமிருந்த முக்கியஸ்தர்களும் தற்போது அவரிடம் இல்லை. அவருடைய கட்சியில் இருந்த தொண்டர்கள் அதிமுகவிற்குத் திரும்பிவிட்டனர். அவரிடம் இப்போது இருப்பது ஒரு சிறு குழுதான்.
அவரால் பிரியும் வாக்குகள் சொற்ப அளவில்தான் இருக்கும். அது அதிமுக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது. அ.ம.மு.க. இணைப்பை வலியுறுத்தாதீர்கள். என்னை நம்புங்கள். பாஜகவின் வெற்றிக்கும் நான் உத்தரவாதம் தருகிறேன்” என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து, பாஜக போட்டியிட விரும்பும் எண்ணிக்கையையும் தொகுதிகளையும் சொல்லி, ‘அதனை உறுதிசெய்யுங்கள், அதுபற்றி தமிழக தலைவர்கள் பேசுவார்கள்’ என அழுத்தமாக தெரிவித்துவிட்டு டெல்லிக்குக் கிளம்பினார் அமித்ஷா.