எம்ஜிஆர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரை மேற்கோள்காட்டி மாணவர்களுக்கு போதை இல்லா சமுதாயம் குறித்த விழிப்புணர்வை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்படுத்தினார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள வள்ளல் எட்டியப்ப நாயகர் மேல்நிலைப்பள்ளியில் போதை இல்லாத சமுதாயத்தை அமைத்திட வேண்டும் என்று போதை ஒழிப்புப் பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்வை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உறுதிமொழி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர்களுடன் உரையாற்றிய அவர், “நேரம் போனால் திரும்ப வராது. அதனால் தான் சுவாமி விவேகானந்தர், ‘கடிகாரத்தைப் பார்; ஓடுவது முள் அல்ல; உன் வாழ்க்கை’ என்றார். இளமைப் பருவத்தில் போனால் திரும்பி வராதது நேரம் மட்டும் தான். நேரம் மிகமிக முக்கியம். ஒவ்வொரு மணித் துளியையும் வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
‘மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா... வளர்ந்து வரும் உலகத்திற்கு வலது கையடா... தனி மனித கொடுமைகள் தீர தொண்டு செய்யடா... தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...’ என முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திரைப்பாடலை மேற்கோள்காட்டி மாணவர்களுக்கு அறிவுரைகளை கூறிய ஜெயக்குமார் மாணவர்களுக்கு உறுதிமொழியை வாசித்தார். அதில் மதுவை ஒழிப்போம், மகிழ்வுடன் வாழ்வோம். உயிருக்கு உலை வைக்கும் வேலைதான் புகையிலை. போதை தவிர் நல்ல கல்வி எனும் பாதையில் நிமிர்” என்று உறுதிமொழியை வாசித்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.