திண்டுக்கல், வேடசந்தூர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க, மத்திய, மாநில காங்கிரஸ் தலைவர்களின் கீழ், குழு அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல காங்கிரஸ், தி.மு.க சார்பில் சர்வேவும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகுதான் வேடசந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறதா என்பது பற்றி தெரியவரும்.
யார் மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து, களத்தில் போராடுகிறார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முடிவு எழுதப்பட்டதுதான். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 234 தொகுதியில் வெற்றி பெறும். நாளுமன்றத் தேர்தலில் எப்படிக் கூட்டணி இருந்ததோ அதே கூட்டணி இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையில் உள்ள ஷட்டர், பழுது ஏற்பட்டு லீக்கேஜ் ஆவதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகாலமாக தமிழகத்தில் எல்லாமே லீக்கேஜ்தான். விவசாய, மக்களுக்குச் சேரவேண்டிய திட்டங்களும் லீக்கேஜ்தான். மக்கள் அதை உணர்ந்துள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் லீக்கேஜ்களை அடைக்க தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சியை மக்கள் அமர்த்துவார்கள்.
நடிகர் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு, 40 நாட்கள் படப்பிடிப்பிற்குச் செல்கிறார். இது போல, தலைவர்களை நான் பார்க்கவில்லை. இந்த கரோனா ஊரடங்கின்போது மிகப்பெரிய பணக்காரரான ரஜினிகாந்த், அவர் நினைத்திருந்தால் பல கோடி ரூபாயை அரசாங்கத்திற்கு கரோனா நிவாரண நிதியாகக் கொடுத்து இருக்கலாம். பொது மக்களுக்கும் உதவி செய்திருக்கலாம். ஆனால், அவர் செய்யவில்லையே. அதுபோல், தமிழ் நாட்டிற்குத் துரும்பைக் கூட வழங்காதவர் ரஜினிகாந்த். அவருக்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள்.” என்று கூறினார்.