இடைத்தேர்தலுக்கான கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசும்போது, எடப்பாடி ஆட்சி மெஜாரிட்டி இல்லாத ஆட்சி. அந்த ஆட்சியை காப்பாற்றுவது மோடிதான். வருகிற 23–ந் தேதியுடன் மோடி ஆட்சி காலியாகி விடும். எனவே அவர்களை மோடியும் காப்பாற்ற முடியாது. எனவே ஆட்சி மாற வேண்டும் என்றால் நம்முடைய மெஜாரிட்டியை 119 எனக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். ஆகையால் இந்த நான்கு தொகுதியிலும் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்.
பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியோ, நான் முதல்-அமைச்சராகி 2¼ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் என்னிடம் மனு கொடுத்ததில்லை. இனிமேலும் கொடுக்க மாட்டார்கள். அப்படியிருக்கும் போது இங்கு அவர்கள் வெற்றி பெற்றால் எண்ணிக்கை வேண்டுமானால் கூடும். அதாவது 88-ல் இருந்து 89 ஆக அதிகரிக்கும். வேறு ஒன்றும் நடக்கப்போவது இல்லை என பேசி வருகிறார்.
தினகரனோ, எல்லா தொகுதிகளிலும் தோற்றுவிடுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. தோல்வி பயத்தில் எனது ஆதரவாளர்கள் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டனர். தமிழகத்தில் வரும் 23ம் தேதிக்கு பிறகு அதிமுக ஆட்சி இருக்காது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம். திமுகவுக்கும், அமமுகவுக்கும் ரகசிய உறவு இருப்பதாக கூறுவது தவறு. திமுகவுடன் எங்களுக்கு எந்த ரகசிய உறவும் இல்லை. செந்தில் பாலாஜி என்னை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து மக்களுக்காக உண்ணாவிரம் இருக்க வைத்தார். இப்போது பா.ஜ.க.வின் சி. டீம் என அவர் பேசுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும். 22 தொகுதியிலும் அமமுகதான் ஜெயிக்கும் என்றார்.
கூட்டணி கட்சிகள் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இதேபோல் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
சூலூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கோவை பட்டணம்புதூர், இருகூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய திருநாவுக்கரசு, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒண்ணும் நிகழவில்லை. ரஜினிகாந்த் தப்பித்துவிட்டார். அதேபோல் புதிதாகக் கட்சி ஆரம்பித்தால் ஒன்றும் பயனில்லை. நான் கட்சி ஆரம்பித்தேன், வைகோ கட்சி ஆரம்பித்தார். இன்னும் நிறை பேர் கட்சி ஆரம்பித்தனர். தனித் தனியாக கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவது சாதாரண காரியமில்லை. வேண்டுமென்றால், நானும் முதல்வர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், முதல்வர் ஆக முடியாது. தனியாகக் கட்சி ஆரம்பித்து எந்த பிரயோஜனமும் இல்லை என கூறினார்.