Skip to main content

காவிரிப் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கை! திமுக மண்டல மாநாட்டின் சிறப்புத் தீர்மானம்

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
dmk2

 

 ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார்

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், மேலாண்மை வாரியத்திற்குப்பதிலான எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம்; மத்திய அரசிடம் , அ.தி.மு.க. அரசு பதவியில் நீடிப்பதற்குக்கண்ஜாடை காட்டியதற்குக் கைமாறாக, மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால்,  மிகப்பெரும் போராட்டம்  வெடிக்கும்:

 
தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராகவும் இருந்தபோது தான், தலைவர் கலைஞர் அவர்களின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது.


நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் எனக் காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமென மதித்து, தமிழ்நாட்டை  மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லிக்  காலம் தாழ்த்திவருகிறது மத்திய அரசு. தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்குத் தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இப்பிரச்சினையில் அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திராவிட முன்னேற்றக் கழகம், மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை  வழங்கி வருகிறது.

 

இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது,தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாகப் பறித்து முறித்துப் போடுகின்ற பகிரங்கமான எதிர்மறைச் செயலாகும்.தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவர் திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டபோது, அதனைப் `பல் இல்லாத ஆணையம்’ என கேலியும் கிண்டலும் செய்தவர் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் என்பதை காவிரி தீரத்து விவசாயப் பெருமக்கள் மறந்துவிடவில்லை.


 இன்று, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகி, அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், அவை அனைத்தும் நீர்த்துப் போகும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற, `பல் இல்லாதது மட்டுமல்ல உயிரற்ற ஒன்றை மத்தியஅரசு’, கர்நாடகத் தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைந்தால், அ.தி.மு.க. அரசு தைரியமாக இந்தப் பச்சைத் துரோகத்தை எதிர்த்து நின்று, மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில், சமாதானமற்ற அழுத்தமான உறுதி காட்ட வேண்டும். உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக் கொடுத்து தெண்டனிட்டுக் கிடந்தால், தமிழக விவசாயிகளையும் வெகுமக்களையும் திரட்டி தி.மு.கழகம் கடுமையான  போராட்டக் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென  இந்த மாநாடு மத்திய-மாநில ஆட்சியாளர்களை இறுதியாக எச்சரிக்கிறது!

சார்ந்த செய்திகள்