ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கடந்த 5-ந் தேதி நடத்திய ரஜினி, அதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிப் பிரமுகர்களை சந்தித்தார். இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனை கடந்த 9-ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். ரஜினியின் மன நிலையை அறிந்த அவரது நட்புவட்டத்தைச் சேர்ந்தவர்களோ, ரஜினியைப் பொறுத்தவரை அவர் தேர்தல் வரை மாணிக்கம் போல் அமைதியாக இருந்து தேர்தல் நெருக்கத்தில் ’பாட்சாவாக’ அவதாரம் எடுப்பார்ன்னு எதிர்பார்க்கிறோம். அதே சமயம், "பாபா' பட பாணியில், தான் அதிகாரத்தில் நேரடியாக உட்காராமல், ஒரு நியாயமானவரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி களத்தை சந்திக்க உள்ளதாக ரஜினி கூறினார். ஆனால் மா.செ.க்களோ நீங்களே அந்தப் பதவியில் அமர்வதைத்தான் மக்களும் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், ரஜினி மனதிற்குள் ஒரு லிஸ்ட்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் முதல் இடத்தில், நேர்மையான கலெக்டர் என பெயர் எடுத்த ’மக்கள் பாதை’ அமைப்பின் நிறுவனர் சகாயம் ஐ.ஏ.எஸ். இருக்கிறார். விரைவில் ரஜினியும் சகாயமும் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சகாயம் ஐ.ஏ.எஸ். எதிலும் அவசரப்படாமல் பொறுமை காக்கக்கூடியவர். அதனால், அவரைப்போல நேர்மையான, அதே நேரத்தில் ரிடையர்டான அதிகாரிகள் பற்றிய லிஸ்ட்டை ரஜினி கேட்டு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் என்று ரிடையர்டு பிரபலங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.