ரஜினி மீதான வருமானவரித்துறை வழக்கில் ஒருநிலையும், விஜய் மீதான வருமானவரி ரெய்டில் இன்னொரு நிலையும் எடுக்கப்படுவதாக விமர்சனம் எழுந்து வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசா ரணை பற்றித்தான் இருப்பதாக கூறுகின்றனர். 2018, மே 22-ந் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களை ஒடுக்குவதற்காக, அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய போலீஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்களில் 13 உயிர்களை பறித்தது. இந்த விவகாரம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அப்போது பதற வைத்தது. அந்த நேரத்தில் அது பற்றி கருத்து கூறிய ரஜினி, அந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்.
அதனால் தான் வன்முறை வெடித்தது. போலீஸாரைத் தாக்கியவர்களை அடையாளம் காண வேண்டும் என்று ஆவேசப்பட்டார். ரஜினியின் இந்தக் கருத்து அந்த சமயத்திலேயே மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், ரஜினியின் அந்தக் கருத்து பற்றி அவரிடமே விசாரிக்க முடிவெடுத்திருப்பதாக சொல்கின்றனர். அதன்படி 25-ந் தேதி ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பி, அவர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டும் என்று ரஜினி தன் வழக்கறிஞர்கள் டீமிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக சொல்கின்றனர். பொதுப் பிரச்சினையில் கருத்து சொன்னதற்கு ஒருவருக்கு சம்மன் அனுப்ப முடியாது என்று ரஜினியின் சட்ட ஆலோசனை டீமில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த கமிஷனில் ரஜினி ஆஜராக நேர்ந்தால், அப்போது அவருக்காக ஆஜராவதற்கு 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார் என்கின்றனர். கடந்த 6-ந் தேதிவரை இதற்கான சம்மன் ரஜினிக்குக் கிடைக்கவில்லை. சம்மன் கிடைத்து, ரஜினி ஆஜரானால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு பலதரப்பிலும் ஏற்பட்டிருப்பதாக சொல்கின்றனர்.