முதல்வர் எடப்பாடி, நடிகர்களை விமர்சித்துக் கொடுத்த பேட்டிக்கு பல திசையிலிருந்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, கமலை விமர்சனம் செய்ய நினைத்த எடப்பாடி, தங்கள் தலைவியின் தலைவரையே கிண்டல் பண்ணியது போல் ஆகிவிட்டது என்கின்றனர். சேலம் மாவட்ட ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, நடிகர் கமலை ஏகத்துக்கும் விமர்சித்து பேசினார். நடிகர்களுக்கு வயதானால் அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள். தங்கள் சினிமா செல்வாக்கை வைத்து தலைவர்களாக வந்து விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அரசியலுக்கு வரும் நடிகர்கள் எல்லோரும் நடிகர் சிவாஜியைப் போலத்தான் ஆவார்கள் என்று கிண்டலாக சொன்னதோட, கமலுக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும் என்று நேரடியாவே அட்டாக் கொடுத்தார்.
![rajini kamal](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nb-0mq685naVFElIDHe8zf2aSVQ7s2wwv8VnE8gLQXc/1574054335/sites/default/files/inline-images/624_0.jpg)
முதல்வரின் இந்த விமர்சனம், கமல், ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது சிவாஜி ரசிகர்களையும் ஏகத்துக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வருக்கு பதிலடி கொடுக்க வரிஞ்சி கட்டிய சிவாஜி சமூக இலக்கிய பேரவையினர், காங்கிரஸோடு அ.தி.மு.க. கூட்டு வைத்திருந்தபோது, அ.தி.மு.க.வினரின் வெற்றிக்காக சிவாஜி, தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்தாரே, அதை மறந்து விட்டீர்களா? நடிகர்கள் வயதானால் அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள் என்று எடப்பாடி சொன்னது அவர்களின் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் பொருந்துமான்னு கேட்டு அவரை ஏகத்துக்கும் விமர்சிக்க ஆரம்பித்து கண்டனம் தெரிவித்தார்கள். இப்படி பல பக்கமிருந்தும் அட்டாக் வரத்தொடங்கியதால்,தேவை இல்லாமல் நடிகர்களின் அரசியல் வருகையை பற்றி பேசி விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டோம் என்று எடப்பாடி நினைப்பதாக கூறிவருகின்றனர்.