சிவகாசியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது, “திமுக தலைவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது அண்டா, குண்டாவை அடகு வைத்து அங்கு வைத்திருக்கும் உண்டியலில் திமுகவினர் போட வேண்டும். அதிமுகவினர் அப்படியல்ல, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாடும்போது ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். முடிந்த உதவிகளைச் செய்வார்கள். ஒன்றுமே இல்லை என்றாலும் கூட எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி பொங்கல், இனிப்புகள் வழங்குவார்கள். இப்படிக் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தமான இயக்கம் அதிமுக.
தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக இயக்கம்தான். எம்ஜிஆர் 11 ஆண்டுகள், ஜெயலலிதா 15 ஆண்டுகள், எடப்பாடி பழனிசாமி 4 ½ ஆண்டுகள் என்று தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக தான். அதிமுகவில் ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போது திமுக ஆட்சிக்கு வந்துவிடுகிறது. சேவல், புறா என்று பிரிந்த நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. அதிமுகவுக்கு சோதனை வரும் நேரத்தில் திமுக குறுக்குவழியில்; சந்து பொந்துகளில் நுழைந்து ஆட்சியைப் பிடித்துவிடுகிறது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, தமிழக முதல்வர் ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் அவர்கள் சொன்னது எதையும் செய்யவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி. குழந்தை பிறந்தால் கர்ப்பிணிகளுக்கு 18 ஆயிரம் அம்மா பரிசுப் பெட்டகம் வழங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி. ஏழைகள் எல்லாருக்கும் கொடுக்கிற ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது. இன்றைக்கு எதுவும் எங்கேயும் கொடுக்கிறது கிடையாது. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுகவினர் நிறுத்திவிட்டனர். பத்தாம் வகுப்பு படித்த பெண் குழந்தைகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25000, ஒரு கிராம் தங்கம் கொடுத்த அரசு அதிமுக அரசு. தாலிக்குத் தங்கம் வழங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி. கல்லூரிப் படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகை அள்ளிக் கொடுத்தது அதிமுக ஆட்சி. இன்றைக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர்.
இன்றைக்கு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடையாது. ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்ஸி கிடையாது, ஃபேன் கிடையாது, அம்மா பரிசுப் பெட்டகம் கிடையாது, தாலிக்குத் தங்கம் கிடையாது. திருமண உதவித்தொகை கிடையாது. சொத்துவரியைக் கூட்டிவிட்டனர், வீட்டுவரியைக் கூட்டிவிட்டனர். இந்த நிலைமை எல்லாம் மாறவேண்டும். உங்களில் ஒருவன், ஏழை, எளிய மக்கள், பாட்டாளி, படைப்பாளி, உழைப்பாளி, நெசவாளி, தொழிலாளி அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்தவர்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களைத் துடைக்காத ஒரு அரசு நிலைத்ததாக வரலாறு கிடையாது. இன்றும் பட்டினியாக இருப்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்கள் அம்மா உணவகம் சென்று தங்களின் பசியைப் போக்கி வந்தனர். இப்போது சென்னையில் அம்மா உணவகத்தை எல்லாம் குறைத்துவிட்டனர். மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டு மூடு விழா நடத்துகின்ற ஆட்சியாகத்தான் திமுக ஆட்சி உள்ளது. திறப்பு விழா நடத்துகின்ற ஆட்சியாக திமுக ஆட்சி இல்லை. இந்த ஆட்சி தேவையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் ஏராளமான முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்தோம். தற்போது திமுக ஆட்சியில் பாதிப் பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டனர். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகையை நிறுத்தி அவர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக அரசு. ஒரு ஊரில் நூறு பேர் முதியோர் உதவித்தொகை வாங்கிக் கொண்டிருந்தால், அதில் 30 பேருக்கு மேலாக நிறுத்திவிட்டனர். கொடுப்பதற்குத்தான் ஒரு ஆட்சி வேண்டுமே தவிர, எடுப்பதற்கு ஒரு ஆட்சி தேவையில்லை. எடுக்கின்ற பணியைச் செய்கின்ற இந்த ஆட்சி வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்” என்றார்.