அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடக்கும் போட்டி நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை ஆதரித்த விவகாரத்தில் வெடித்தது. காஷ்மீர் விவகாரத்தில் முத்தலாக் மசோதா மாதிரி ஆகிவிடக்கூடாது என்று அமித்ஷா முன்கூட்டியே எச்சரித்தார்.
அதனால் நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து பேசினார். அதேபோல் ரவீந்திரநாத்குமார் மக்களவையில், ''ஜெயலலிதா 1984ல் மாநிலங்களவையில் காஷ்மீரில் நடைபெறும் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியதுடன், இந்தியாவுடன் காஷ்மீர் எப்போது சேரும் என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு இப்பொழுது பதில் கிடைத்துள்ளது'' என்றார். ரவீந்திரநாத்குமார் பேச்சை சிரித்துக்கொண்டே ரசித்தார் அமித்ஷா.
1984ல் ஜெயலலிதா காஷ்மீர் விவகாரத்தில் எப்படி பேசினார் என்று அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ''ஜெயலலிதா அப்போதுதான் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு சென்றார். அவர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய குறிப்புகளை அப்போது பத்திரிகையாளரான 'சோ' தான் எழுதிக்கொடுப்பார். 'சோ' பாஜக ஆதரவாளர் என்பதால் காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எழுதிக்கொடுத்தார். அதனை ஜெயலலிதா அப்படியே பேசினார்.
அன்று தொடங்கிய பாஜக ஆதரவு நிலை என்பது, இன்று வரை அதிமுகவில் தொடருகிறது. அமித்ஷாவின் எச்சரிக்கையால் ஒட்டுமொத்த அதிமுகவும் ஒரே வழியாக நின்று ஜெயலலிதாவை காரணம் காட்டி காஷ்மீர் மசோதாவை ஆதரித்த விநோதம் நாடாளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது'' என்றனர்.