கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அங்குத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கர்நாடக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து சிக்மங்களூரு என்ற இடத்தில் பேசுகையில், " காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் எங்கள் கட்சியின் அனைத்து தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறோம். ஆனால், பிரதமர் மோடியோ, பாஜகவை சேர்ந்த எந்த தலைவர்களின் பெயரையும் உச்சரிப்பதில்லை. பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. மேலும் தன்னைப் பற்றி தான் பேசுகிறார்" எனப் பேசினார்.