
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோரது படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “அரசியலில் சாமானியன் இருப்பது மிகக் கடினமான வேலை. நீங்கள் எந்த தொழில் செய்தாலும் முதல் தலைமுறை சாமானியனுக்கு இருக்கும் பிரச்சனைகள் எனக்கும் இருக்கிறது. குடும்பத்தில் யாரும் அரசியல்வாதி இல்லை. எனக்கென்று ஒரு பாதை போடவில்லை. என்னைப் பாதுகாக்க யாரும் இல்லை. என்னைப் பாதுகாத்து கரம்பிடித்து அரசியலில் வழிநடத்திச் செல்வதற்குக் கூட யாரும் இல்லை.
மாநிலத் தலைவராக மாதத்திற்கு 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அண்ணாமலையால் எப்படி முடியும் என்றால் முடியாது. சுற்றி இருக்கும் நண்பர்களது உதவியுடனும் கட்சியின் உதவியுடனும் தான் நடத்திக்கொண்டு இருக்கிறேன். மூன்று பி.ஏக்கள் இருக்கிறார்கள் என்றால் 3 நண்பர்கள் கொடுக்கிறார்கள். காருக்கு டீசல் எல்லாம் கட்சி கொடுக்கிறது. சிஆர்பிஃப் வந்த பின் பெரிய வீட்டிற்கு மாறினேன். அந்த வீட்டிற்கு வாடகை வேறொருவர் கொடுக்கிறார்.
ரபேல் என்பது இந்த வாட்சின் பெயர். உலகில் மொத்தமாக இருப்பதே 500 வாட்ச் தான். 147 ஆவது வாட்ச் இது. இந்தியாவில் மொத்தமாக 2 வாட்ச் மட்டும் தான் விற்றிருக்கிறது. கோவையில் இருக்கும் ஜிம்சன் என்ற வாட்ச் கம்பெனியில் இரண்டாவது வாட்ச் விற்கப்பட்டிருக்கிறது. நான் இந்த வாட்ச் வாங்கியது மே 27 ஆம் தேதி. இந்த வாட்சினை வாங்கியது கோவையில் இருக்கும் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பர். 2021 மார்ச் மாதம் வாங்கப்பட்ட வாட்ச் என் கைக்கு வந்தது மார்ச் மாதம். இதற்கான ரசீது எல்லாம் இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.