கடந்து சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஏற்றத்தையே கண்டு வருகிறது. அதனைக் கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். தற்போது பெட்ரோலின் விலை 91 ரூபாயாக விற்கப்படுகிறது. இதனால் அனைத்து அத்யாவசியப் பொருட்களும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சமையல் எரிவாயு கடந்த ஒரு மாதத்தில் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில் மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து இன்று (16.02.2021) நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் நிறுவனம் எதிரில் சிஐடியு.கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அக்கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “நமது இந்திய நாடு நடுத்தர மக்களைக் கொண்ட நாடு. கடந்த 1996ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமர் தலைமை வகித்தபோது, அவரது மந்திரி சபையில் யஷ்வந்த் சின்ஹா பெட்ரோலிய மந்திரியாக பதவி வகித்தார். இவர்தான் முதன்முதலில் 15 நாட்களுக்கு ஒருமுறை டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தினார். அதன்பின் மோடி ஆட்சியில் தினம் தினம் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகிறார்கள். ஏழை மக்களைத் தினம் தினம் சுரண்டி வரும் பாஜக ஆட்சியில், இன்று பெட்ரோல் விலை 100ஐ நெருங்குகிறது. ஈராக் சண்டை நேரத்தில் ஒரு பேரல் குருடாயில் விலை 120 டாலர். ஆனால் பெட்ரோல் விலை 60 ரூபாய்தான். இன்று குருடாயில் விலை 50 - 60 டாலர்தான்.
ஆனால் பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையோ இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நமது அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை மிக மிகக் குறைவு. இந்தியாவில் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 7 வருடத்தில், பெட்ரோல் விற்பனையில் 1.5 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார். எனவே அச்சங்கம் சார்பாக, அதிகரிக்கும் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோலிய அலுவலகம் முன்பு காலை 10:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் அனைவரும் சங்க வித்தியாசமின்றி கலந்துகொண்டு போராட்டத்தை நடத்தினர்.