Published on 26/06/2019 | Edited on 26/06/2019
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அதிமுக அரசு எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று அதிமுக எம்.பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமார் மக்களவையில் பேசும் போது, அதிமுகவை ஊழல் அரசு என்று திமுக எம்.பி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் பிரதிநிதியாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன். எனக்கு எதிராக இருக்கும் 37 பேர் உண்மைக்கு புறம்பான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என பேசினார்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/74jTq7GXydnJk4_VjxBBeqkYYAHmbkAa3qbSnk89SQI/1561543479/sites/default/files/inline-images/444_4.jpg)
பின்பு குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பட்டியலிட்டு பேசினார். இந்தப் பட்டியல்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் வழங்க தயாராக இருப்பதாகவும், அதை திமுக உறுப்பினர்கள் படித்துப் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து ரவீந்திரநாத் குமார் தொடர்ந்து பேசும்பொழுது கூச்சல் குழப்பங்கள் ஏற்படவே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதையடுத்து அவரது உரை பாதியிலேயே முடிக்கப்பட்டது. இதனால் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்துக்கும், திமுக எம்.பி. களுக்கும் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.