எல்லா பழியையும் ஆளுநர் மீது போட்டுவிட்டுத் தப்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''காவல்துறையில் கீழே இருக்கின்ற அதிகாரிகள் கடுமையாகப் பணி செய்கிறார்கள். அதற்கான ரிசல்ட் ஃபீல்டில் இல்லை. காரணம் மேலே இருக்கக்கூடிய உயர் அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து வேலை செய்கிறார்கள்.
குறிப்பாக நமது இன்டெலிஜென்ட் டிபார்ட்மென்ட் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் இமேஜிக்கு கெட்ட பெயர் வராமல் கண்காணிப்பதில் தான் மேக்ஸிமம் வேலை செய்கிறார்களே தவிர, சாதாரண மக்களைப் பாதுகாப்பதற்கு நேரம் இல்லை. அதனுடைய மெத்தனப்போக்கு தான் ஒவ்வொரு விஷயமாக வெளிப்பட்டு வருகிறது. வேறு ஒரு மாநிலத்தில் இதேபோல் குண்டு வெடிப்பு நடக்கிறது 2 மணி நேரத்தில் அந்த காவல்துறை சொல்கிறார்கள் இது டெரர் அட்டாக், அடுத்தகட்ட வேலை ஆரம்பித்துவிட்டோம் வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று.
ஆனால் இங்கு இன்னுமே இதனை டெரர் அட்டாக் என்று சொல்வதற்குக் கூச்சப்படுகிறார்கள். சொல்லிவிட்டால் திமுக நம்மைப் பதவியிலிருந்து தூக்கி விடுவார்கள் என்ற அச்சமான சூழ்நிலையில் காவல்துறையினர் இருந்தால் எப்படி காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியும். ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டு இங்கே வந்திருக்கிறார். மாநில அரசு எல்லா பழியையும் ஆளுநர் மீது போட்டுவிட்டுத் தப்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.