அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து ஏற்றத் தாழ்வுகளை பார்த்தவர் சசிகலா. ஆகையால் நிர்வாகிகள் விலகி செல்வதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு நிர்வாகிகள் சில முடிவுகள் எடுத்து செல்கிறார்கள். வேறு கட்சிக்கு செல்லும்போது பல காரணங்களை சொல்லுவார்கள்.
சில பேர் சொல்கிறார்கள், நான் ரொம்ப அகங்காரமாக, ஆணவமாக போகிறவர்கள் போகட்டும் என்று சொல்கிறேன் என்று. அப்படி கிடையாது. சேலஞ்சர் துரை, புகழேந்தி, பூந்தமல்லி ஏழுமலை போன்றவர்கள் அவர்களாக கட்சியில் எங்கக் கூட இருக்கணும் என்ற சுய விருப்பத்தில் இருக்கிறார்கள்.
ஒரு நிர்வாகி அவராகவே போகணும் என்று முடிவு எடுத்த பிறகு தடுத்து வைக்க முடியுமா? இல்லை அவர்களை தடுப்பது நியாயமாக இருக்குமா? அரசியலில் ஒரு இயக்கத்தில் இருப்பது சுய விருப்பத்தோட இருக்க வேண்டும். போனவர்கள் எல்லாம் முக்கிய தளபதிகள் கிடையாது.
அரசிலை தாண்டி நண்பராக பழகி இருக்கிற சேலஞ்சர் துரையோ, 20 வருடங்களாக பழகிய புகழேந்தியோ போனார்கள் என்றால் வருத்தமாக இருக்கும். புகழேந்தி ஜெயலலிதாவுக்காகவும், சசிகலாவுக்காகவும் விஸ்வாசமாக இருந்தவர். இவர் போனார் என்றால் உண்மையிலேயே வருத்தமாக இருக்கும். போகிறார் என்று
தெரிந்தால் நான் பேசிப்பார்ப்பேன். (அப்போது உடன் இருந்த புகழேந்தி, ''போகவே மாட்டேன்'' என்றார்).
இசக்கி சுப்பையா எனக்கு தெரிந்த நண்பர். அவருக்கு அரசு நெருக்கடி கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு காண்ட்ராக்ட்டில் பாக்கி வர வேண்டியது இருக்கிறது. 70 கோடியோ எவ்வளவோ பாக்கி இருக்கு என்று தனி அறையில் சொல்லவில்லை. ஒன்றரை வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும்
போகாமல் எங்கக்கூட இருந்தார். நாங்க வெற்றி பெறுவோம் என்று நினைத்து இருந்தார். இப்போது வெற்றி பெறவில்லை என்றதும், சுய நலத்துக்காக சென்றிருக்கிறார்.
சசிகலா மற்றம் தினகரன் தவிர யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். காலம் இதெல்லாம். பதவிப் படுத்தும் பாடு. நிர்வாகிகள் செல்வதால் அன்று அது ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால் அமமுக தொண்டர்களால் உருவான இயக்கம். காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அமமுக தொடர்ந்து செயல்படும் என்றார்.