புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசு மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயத்தில் உள்ள ஆன்மீகப் பூங்காவில் வெளிமாநில பக்தர்களை கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 7.70 கோடி செலவில் 9 நவக்கிரக மூர்த்திகளின் சன்னதிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தன. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி காணொளி காட்சி மூலம் ஆன்மீகப் பூங்காவை திறந்து வைத்தார். இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரி சுற்றுலா திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. புதுச்சேரிக்கு வணிக வரி, கலால் வரி, சுற்றுலாப் பயணிகள் வருவாய் தான் ஆதாரமாக உள்ளது. புதுச்சேரியில் சுயமாக வருவாயை பெருக்க சுற்றுலாவை வளர்ச்சி அடைய வைக்க வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசிடம் அடிக்கடி நிதி கேட்க வேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது. மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்குவதற்கு ஏற்படும் கால தாமதத்தால் பல திட்டங்கள் முடங்கும் நிலையில் உள்ளது. விதிகளை தளர்த்தினால் புதுச்சேரியில் முதலீடு செய்ய வருவார்கள்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஆனால் சிலவற்றில் முடிவெடுக்க தடங்கல்கள் ஏற்படுவதால் வளர்ச்சியும், வருவாயும் பாதிக்கப்படுகின்றது. புதுச்சேரியில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு புதுச்சேரிக்கு வந்தால் உடனடியாக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும். புதுச்சேரியை நான் சிங்கப்பூராக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை" என கூறினார்.
பின்பு பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, "முதலமைச்சரின் கோரிக்கைகள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதற்கான தீர்வுகள் கிடைக்கும். சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தை சேர்த்துள்ளோம். இதன் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ரூ.100 கோடியில் சுற்றுலா திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "புதுச்சேரியை புயல் அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் பணியை பாராட்டுகின்றேன். புயலை நல்ல முறையில் எதிர்கொண்டதாக சிலர் முதுகில் தட்டிக் கொண்டிருக்கும் போது புதுச்சேரி அரசு அதை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது" என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் முதல்வர் ரங்கசாமி மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்பாக தனது அரசுக்கு ஏற்படும் பின்னடைவுகளை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.