கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் தேதி நேற்று (29.03.2023) காலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப். 13 ஆம் தேதி தொடங்கி ஏப். 20 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு மீதான பரிசீலனை ஏப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப். 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே. 10 ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏபிபி - சிவோட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 115 முதல் 127 இடங்கள் வரையிலும், பாஜக 68 முதல் 80 இடங்கள் வரையிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 முதல் 30 தொகுதிகள் வரை பெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பானது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.