வரும் சட்டமன்றத் தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டு வர திட்டம் போட்டு வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கின்றனர். அதோடு திமுகவில் இருக்கும் இளைஞர்களை ஒன்றிணைக்க சமூக வலைத்தளங்கள் மூலம் முயற்சி எடுக்கலாம் என்று பிரசாந்த் கிஷோர் டீம் புது ஆலோசனையை திமுக தலைமையிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுகவில் இருக்கும் பலம், பலவீனம் பற்றி பிரசாந்த் கிஷோர் டீம் ஆய்வு நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஆய்வு நடத்தியதில் திமுகவில் பலம் அதிகளவு இருந்தாலும் பலவீனம் என்று கொங்கு மண்டலத்தை நோட் செய்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைய முக்கியக் காரணமாக இருந்தது கொங்கு மண்டலம் தான். இதனால் கொங்கு மண்டலத்தில் திமுகவில் சரியாகத் தேர்தல் பணியைச் செய்யாத நிர்வாகிகளின் பட்டியலைத் தயார் செய்து திமுக தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் டீம் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு கொங்கு மண்டலத்தில் சிறப்பாக கட்சி பணிபுரியும் நிர்வாகிகளுக்கும் பதவி உயர்வு கொடுக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் திமுகவில் கட்சி பணியைச் செய்யாமல், ஒத்துழைப்பும் கொடுக்காமல் இருக்கும் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.