Skip to main content

“மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது” - அண்ணாமலை

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

The post of President is like an onion says Annamalai

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதே சமயம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார்.

 

The post of President is like an onion says Annamalai

 

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “போலியான சமாதானப்படுத்தும் அட்ஜஸ்மெண்ட் அரசியல் என்னிடம் கிடையாது. யாருக்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது. கட்சியில் பொறுப்பில் இருக்கக்கூடிய நேரத்தில் கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம். கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமை முடிவெடுக்கும். பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை” எனத் தெரிவித்தார். அதே சமயம் தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவி இல்லையென்றாலும், கட்சியில் தொடர்ந்து நீடிப்பீர்களாக என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது கோபம் அடைந்த அண்ணாமலை, அங்கு இருந்த பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்