வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழக மக்கள் தமிழகம் வர வாகன வசதியை தமிழக அரசு ஏற்பாடு செய்து அழைத்து வரவேண்டும் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''கடந்த 24.4.2020 அன்று எனது கரூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் நம் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திலும், வேதனையிலும் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை தமிழக அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
தற்போது பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் செயலர் அதுல்ய மிஸ்ரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் இணையத்தில் பதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழர்களில் பலர் தொழிலாளர்கள். அவர்கள் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஹெல்ப் லைன் அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது விரைவில் அவர்கள் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும்.
அதே போல சிலர் அனுமதி மட்டும் கிடைத்தால் போதும் சொந்த செலவில் வந்துவிடுவார்கள். ஆனால் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் பலர் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களுக்கு வாகன வசதியை தமிழக அரசு ஏற்பாடு செய்து அழைத்துவரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் நம் தமிழக மக்களுக்குப் போதுமான பரிசோதனை வசதிகளும், அவசியம் ஏற்பட்டால் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்''. என கூறியுள்ளார்.