காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி அசைத்து இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் இந்தப் பயணமானது தற்போது 117வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் ஆலோசகருமான பொன்ராஜ் வெள்ளைச்சாமி நேற்று முன்தினம் ஹரியானா - பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள உள்ள கர்நோல் என்ற இடத்தில் ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 115வது நாளில் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், "சுதந்திர தினத்திற்கு முந்தைய நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு உரையாற்றிய இலட்சியத்தை நோக்கிய முயற்சி என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெற்றி பெற்றதைப் போன்று, தற்போது ராகுல் மேற்கொண்டு வரும் இந்த நடைப்பயணம், மக்களை ஒன்றிணைத்து பாசிச சக்திகளைத் தோற்கடித்து இந்த ஒற்றுமைப் பயணம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.