எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23 ஆம் நடந்த பொதுக் குழுவில் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக் கூட்டம் கூடக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். இபிஎஸ்-ஐ பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவால் அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
இந்த உத்தரவு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த தொலைபேசி பேட்டியில், ''இந்த தீர்ப்பு சரியான தீர்ப்பா அல்லது மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டிய தீர்ப்பா? என சட்ட ரீதியாக ஆராய வேண்டும். நடந்த பொதுக்குழுவைப் பொறுத்தவரை சட்டத்திற்கு உட்பட்டுத்தான் கூட்டப்பட்டது. ஓபிஎஸ் அதைப் புறக்கணித்தார். 98 சதவிகிதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ளவில்லை. எப்பொழுது திமுகவின் தலைவர் கலைஞரை கடவுளுக்கு சமமாக எனது தந்தை வணங்கினார் என சட்டமன்றத்தில் ஓபிஎஸ் தெரிவித்தாரோ அப்பொழுதே தொண்டர்கள் மத்தியிலே செல்லாக் காசாக மாறிவிட்டார்'' என்றார்.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து 'நான்கு வருஷமா கொள்ளை அடிக்கவிட்டார் பாத்திங்களா எடப்பாடி, அதான் அவர் முதுகுலையே இப்ப குத்திட்டாங்க' என பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.