கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்தது. அப்போது அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. மறு தேர்தல் 30ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற்றது. மொத்தம் 22 கவுன்சிலர்களை கொண்ட ஒன்றிய குழு தேர்தலில் திமுக உள்பட 16 கவுன்சிலர் ஆதரவுடன் திமுகவை சேர்ந்த உஷாராணி குமரேசன் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 22 கவுன்சிலர்களில் திமுக 8, அதிமுக 6, பாமக 3, சிபிஎம் 1, சுயேட்சை 4 என இருந்த நிலையில் 12ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது. திமுக சேர்மேன் வேட்பாளர் உஷாராணி குமரேசனுக்கு ஆதரவாக பாமகவைச் சேர்ந்த 3 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் என வாக்களிக்க இருந்தனர்.
அப்போது தனது கூட்டணி கட்சியான பாமக, திமுகவுக்கு ஆதரவு அளிப்பது தெரிந்ததும், அதிமுகவினர் தங்கள் ஆதரவில் உள்ள 9 கவுன்சிலர்களுடன் உள்ளே வந்து தேர்தல் அதிகாரியிடம் இருந்த தேர்தல் ஆவணங்களை கிழித்து வீசினர். தேர்தல் நடத்த கூடாது என்று பிரச்சனை செய்தனர்.
இதனால் தேர்தல் நடத்த கால தாமதம் ஆனது. பிறகு அதிமுக நிர்வாகிகள் சிலர் தேர்தல் அலுவலகத்தில் உள்ளே இருப்பதாக கூறி அவர்களை வெளியேற்ற சொல்லி திமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு சமரசம் செய்யப்பட்டது. நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் தேர்தலை நடத்தாத காரணத்தால் உடனே தேர்தலை நடத்த கோரி திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்பி சுகவனம், சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பிறகு ஊத்தங்கரை தேர்தல் அதிகாரி கூறுகையில், ஆவணங்களை அதிமுகவினர் சிலர் கிழித்ததாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளதாகவும் கூறி மறு தேதி அறிவிக்காமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
பாமகவைச் சேர்ந்த ராஜசேகர் தனக்கு துணை சேர்மேன் பதவி கேட்டதற்கு, அதிமுகவினர் அதற்கு மறுத்துள்ளனர். இதனால்தான் பாமக கவுன்சிலர்கள் திமுகவுக்கு மறைமுக தேர்தலில் ஆதரவு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.