கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இருந்து பாமக, அதிமுக கூட்டணியில் இருக்கிறது. தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்தக் கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தநிலையில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட, பா.ம.க., பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, ஐந்து கட்ட அறவழிப் போராட்டத்தை முடித்து, ஆறாவது கட்டமாக, வரும் 29ல், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க., அமைச்சர்கள், இட ஒதுக்கீடு தொடர்பாக, ராமதாசுடன் பேசி உள்ளனர்.
பொங்கலுக்கு பின் முடிவை அறிவிப்பதாக தெரிவித்ததால், அதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பா.ம.க.,வை பொறுத்தவரை, சட்டசபை தேர்தல் கூட்டணியை விட, வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு தான் முக்கியம். இது குறித்து, தி.மு.க., வாய் திறக்காமல் உள்ளது. அவர்கள், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முன் வந்தால், கூட்டணி குறித்து, ராமதாஸ் முடிவு செய்வார். இவ்வாறு கூறினார்.