நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படும் சமூகத்தினரை எஸ்.டி. பட்டியலில் சேர்க்கும் பழங்குடியின அரசியல் சாசனத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் என அழைக்கப்படும் சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் சமூகத்தில் சேர்த்து சாதிச்சன்றிதழ் வழங்க வேண்டும் என்று நெடுநாட்களாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், கடந்த செப். 14 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் என அழைக்கப்படும் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் குருவிக்காரர், நரிக்குறவர் என அழைக்கப்படும் சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்த நிலையில் நிறைவேற்றப்பட்டது.
தற்போது இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பதற்காக நான் ஏற்கனவே பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தேன். எங்கள் தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் இது குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். இச்சமூகங்களின் கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.