அதிமுக, அமமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது தேர்தல் களத்தை விறுவிறுப்படைய செய்திருக்கிறது. நாகை, திருவாரூர் மாவட்ட அதிமுகவினர், வேட்பாளர் அறிவிப்பால் குதூகலத்திருந்தாலும், புதிதாக உருவெடுத்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்கி இருப்பது அதிமுகவினரை கோவப்பட செய்திருக்கிறது.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இருந்த பூம்புகார், சீர்காழி (தனி), மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பு பலதரப்பட்ட மக்களையும் குதூகலமடைய செய்தது. இந்தச் சூழலில் அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என்றும், யாருக்கு சீட் வழங்கினாலும் தொகுதியைக் கைப்பற்றி விடலாம் என்கிற கொண்டாட்டத்தில் தேர்தல் பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் மயிலாடுதுறை தொகுதியைக் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியிருப்பதைக் கண்டு அதிமுகவினர் எரிச்சல் அடைந்தனர்.
மேலும் வார்டுவாரியாக கணக்கெடுத்து வைத்திருந்த பட்டியலைக் கிழித்து வீசத் துவங்கியுள்ளனர். இதுகுறித்து அதிமுக தொண்டர்களிடம் விசாரித்தோம், “மயிலாடுதுறை தொகுதி சாதாரணமாகவே திமுக, அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும். திமுகவில் ஏகப்பட்ட கோஷ்டி பூசலால், உள்ளாட்சியில் அதிக கவுன்சிலர்கள் வெற்றிபெற்று, திமுகவினர் சேர்மன் ஆக வேண்டியிருந்தும், கோஷ்டி பூசலால் மயிலாடுதுறை உள்ளிட்ட பல ஊராட்சி ஒன்றியங்களில் பலவீனமடைந்தனர். அது அதிமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அறிமுக வேட்பாளராக ராதாகிருஷ்ணன் என்பவரை களமிறக்கி அபார வெற்றியைக் கண்டோம். இந்தமுறை மாவட்டம் அறிவிப்பு, கொள்ளிடத்தில் தடுப்பணை, பாதாள சாக்கடை நிதி ஒதுக்கீடு, வெளிவட்ட சாலைக்கான நில அர்ஜிதம் என அடுத்தடுத்த அறிவிப்புகளால் இந்தமுறையும் தொகுதியைக் கைப்பற்றி விடுவோம் என்கிற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் எதிர்பார்க்காத விதமாக பாமகவிற்கு தொகுதியை ஒதுக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. புதிய மாவட்டமாக உருவெடுத்து நடைபெறும் முதல் தேர்தலில் நமது வேட்பாளர்தான் நிற்க வேண்டும் என்கிற சாதாரண அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அதிமுக தலைமை செயல்படுவதைக் கண்டு வேதனையாக இருக்கிறது” என்று எரிச்சல் அடைகின்றனர்.