நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.
பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.